ஜல் ஜீவன் திட்டத்தில் குடிநீர் இணைப்பு வழங்க ரூ.6 ஆயிரம் வசூலிப்பதாக புகார்

கரூர் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் குடிநீர் இணைப்புக் கட்டணமாக ரூ.1,200 நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், ரூ.6 ஆயிரம் வரை கட்டாய வசூல் செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
ஆனால், மாவட்ட ஆட்சியர் அப்படி முறைகேடு ஏதும் நடக்கவில்லை என்கிறார்.
வரும் 2024ம் ஆண்டிற்குள் அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடி நீர் வழங்கும் இலக்குடன் ஜல் ஜீவன் மிஷன் என்கிற திட்டம் மத்திய அரசால் கடந்த 2019ம் ஆண்டு சுதந்திர தினத்தன்று தொடங்கப்பட்டது. மாநில அரசின் பங்களிப்புடன் நடைபெறும் இத்திட்டத்தில், மக்கள் குடி நீருக்காக அலையும் நிலையைப் போக்கி, 55 லிட்டர் வரை குடிநீர் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக கிராமப் பகுதிகளில் அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் வழங்க முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இதற்கு தனி நிதி ஒதுக்கீடும் செய்யப்படுகிறது. கிராம ஊராட்சிகளில் இத்திட்டத்தை செயல்படுத்த குறைந்தபட்ச வைப்புத் தொகையை நிர்ணயம் செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் குடிநீர் இணைப்பு பெற கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் வட்டம் கள்ளப்பள்ளி கிராம ஊராட்சியில் ரூ. 1, 200 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில், ரூ. 6 ஆயிரம் வரை கட்டாய வசூல் செய்து வருகின்றனர் என்று புகார் எழுந்துள்ளது.
இது குறித்து, தற்போது ராஜஸ்தானில் மத்திய தொழில் பாதுகாப்பு படையில் (சி.ஐ.எஸ்.எப்) பணியாற்றி வரும் புனவாசிப்பட்டி பகுதியைச் சேர்ந்த பெரியசாமி மத்திய நீர் வளத்துறையில் புகார் செய்தார். தொடர்ந்து, கரூர் மாவட்ட ஆட்சியரிடமும் ஒரு புகார் அளித்துள்ளார். புகாரில், “கள்ளப்பள்ளி ஊராட்சியில் அனைவருக்கும் இலவச குடிநீர் வழங்கும் திட்டத்தில் முறைகேடு செய்கிறார்கள். அரசையும் பொது மக்களையும் ஏமாற்றி ரூ. 6000 வசூல் செய்கிறார்கள். எனவே, இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கூடுதலாக வசூலிக்கப்பட்ட பணத்தை பொது மக்களிடம் திரும்ப வழங்க வேண்டும். ” என்று தெரிவித்துள்ளார்.