கொரோனா பரவலை தடுக்காவிட்டால் ஐரோப்பாவில் மார்ச் மாதத்துக்குள் 5 லட்சம் பேர் பலியாகலாம்: WHO எச்சரிக்கை
கொரோனா பரவல் தொடர்பாக உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை எனில் வரும் மார்ச் மாதத்துக்குள் ஐந்து லட்சம் பேர் உயிரிழக்கலாம் என உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய பிராந்திய இயக்குநர் ஹான்ஸ் க்ளூக் பிபிசியிடம் கூறினார்.
முகக்கவசம் அணிவது உடனடியாக வைரஸ் தொற்று எண்ணிக்கையைக் குறைக்க உதவும் என்று கூறினார் க்ளூக். ஐரோப்பிய பிராந்தியத்தில் உள்ள பல நாடுகளிலும் வரலாறு காணாத அளவுக்கு கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளது, மேலும் பல நாடுகளிலும் முழு ஊரடங்கு அல்லது பகுதி ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில் உலக சுகாதார அமைப்பிடமிருந்து இப்படி ஒரு எச்சரிக்கை சமிக்ஞை வந்துள்ளது.
குளிர் காலம், போதுமான அளவுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படாதது, ஐரோப்பிய பிராந்தியத்தில் கொரோனாவின் டெல்டா திரிபு பரவுவது என பல்வேறு காரணிகள் இந்த மாபெரும் பரவலுக்குப் பின் இருப்பதாக டாக்டர் க்ளூக் கூறினார்.
கொரோனா பரவல் அதிகரிப்பைச் சமாளிக்க கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதை அதிகரிப்பது, அடிப்படை பொது சுகாதார நடவடிக்கைகளைச் செயல்படுத்துவது, புதிய மருத்துவ சிகிச்சை முறைகளை செயல்படுத்துவது போன்றவை உதவும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“கொரோனா வைரஸ் மீண்டும் ஐரோப்பிய பிராந்தியத்தில் அதிக உயிரிழப்புக்கு காரணமாகியுள்ளது” என பிபிசியிடம் கூறினார். “வைரஸ் பரவலை எதிர்கொள்ள என்ன செய்ய வேண்டும் என நமக்குத் தெரியும் எனவும் கூறினார். கட்டாயமாக கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளச் சொல்வதை கடைசி வாய்ப்பாகக் கருத வேண்டும் என கூறினார் க்ளூக். ஆனால் இப்போது அது தொடர்பாக சட்ட ரீதியிலும், சமூக ரீதியிலும் விவாதங்கள் நடத்தப்படுவது சரியாக இருக்கும் என்றும் குறிப்பிட்டார்.