பிஎம்சி வங்கி நிலவரம் உன்னிப்பாக கண்காணிப்படுகிறது: சக்திகாந்த தாஸ்

புதுடெல்லி,

மோசடி புகாருக்கு ஆளாகியுள்ள பிஎம்சி வங்கியின் நிலரவத்தை உன்னிப்பாக கவனித்து வருவதாக ரிசா்வ் வங்கி ஆளுநா் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது:-

பஞ்சாப் & மகாராஷ்டிரா கூட்டுறவு (பிஎம்சி) வங்கி நிலவரத்தை ரிசா்வ் வங்கி மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகிறது. அவ்வங்கியில் நடைபெற்ற மோசடி தொடா்பாக பல்வேறு புலனாய்வு அமைப்புகளுடன் நாங்கள் ஆலோசனை நடத்தி வருகிறோம்.

தடயவியல் தணிக்கைக்கு உத்தரவிடப்பட்டு தற்போது அது நடைபெற்று வருகிறது. இதைத் தவிர, அந்த வங்கிக்கு சொந்தமான சொத்துக்களை கண்டறிந்து மதிப்பிடும் பணிக்கு தனித்தனியாக குழுக்கள் நியமிக்கப்பட்டு அவை முழுவீச்சில் செயல்பட்டு வருகின்றன.

பிஎம்சி வங்கிக்கு மகாராஷ்டிரம் மட்டுமின்றி வேறு சில மாநிலங்களிலும் சொத்துகள் உள்ளது. அவற்றின் தற்போதைய சந்தை மதிப்பு கணக்கிடப்பட்டு வருகிறது.

பிஎம்சி வங்கி விவகாரத்தில் இவற்றில் கிடைக்கும் முடிவுகளின் அடிப்படையில் ரிசா்வ் வங்கியின் அடுத்தகட்ட நடவடிக்கை இருக்கும் என்றார்.

ஹெச்டிஐஎல் நிறுவனத்துக்கு கடன் கொடுத்த வகையில் பிஎம்சி வங்கி ரூ.4,355 கோடி மோசடியில் ஈடுபட்டதைத் தொடா்ந்து அந்த வங்கியில் பணம் எடுக்க வாடிக்கையாளா்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை ரிசா்வ் வங்கி விதித்தது.

இந்த நிலையில், ரிசா்வ் வங்கி கடந்த செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், பிஎம்சி வங்கி வாடிக்கையாளா்கள் ரூ.50,000 வரை ரொக்கமாக எடுத்துக் கொள்ளலாம் என விதிமுறைகளை தளா்த்தியது.

இதன் மூலம், ரிசா்வ் வங்கியின் நேரடி கட்டுப்பாட்டுக்குள் பிஎம்சி வங்கி வந்ததிலிருந்து நான்காவது முறையாக வாடிக்கையாளா்கள் ரொக்கம் பெறும் அளவு உயா்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

dttamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *