பிரதமர் மோதி போர்ச்சுகல் அதிபருடன் பேச்சுவார்த்தை: 7 ஒப்பந்தங்கள் கையெழுத்து

புதுடெல்லி,

பிரதமர் நரேந்திர மோதி போர்ச்சுகல் அதிபர் டிசோசாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் இரு நாடுகளிடையே 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

போர்ச்சுகல் அதிபர் மார்செலோ ரிபெலோ டிசோசா தனது முதல் இந்திய பயணமாக நேற்று முன்தினம் இரவு டெல்லி வந்தார். 4 நாள் பயணமாக வந்துள்ள அவருடன் உயர் அதிகாரிகள் குழுவும் இந்தியாவுக்கு வந்துள்ளது. இதற்கு முன்பு 2007-ம் ஆண்டுதான் போர்ச்சுகல் அதிபர் இந்தியா வந்தார்.

டிசோசாவுக்கு நேற்று காலை குடியரசுத் தலைவர் மாளிகையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் பிரதமர் நரேந்திர மோதியும், போர்ச்சுகல் அதிபர் டிசோசாவும் இருதரப்பு நல்லுறவு குறித்து விரிவான பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இறுதியில் இரு நாடுகள் இடையே 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

முதலீடு, போக்குவரத்து, துறைமுகங்கள், கலாச்சாரம், தொழில் துறை மற்றும் அறிவுசார் சொத்துரிமை, கப்பல் போக்குவரத்து ஆகிய 7 துறைகளில் இரு நாடுகளுக்கு இடையே இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனை இருவரும் கூட்டு அறிவிப்பாக வெளியிட்டனர். வர்த்தகம், முதலீடு, கல்வி தொடர்பான தற்போது உள்ள அனைத்து ஒப்பந்தங்களையும் தொடர்ந்து நீட்டிப்பது என்றும் பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தெற்கு ஐரோப்பாவில் உள்ள போர்ச்சுகல் இந்தியாவுக்கு முக்கிய நாடாக விளங்குகிறது. கடந்த 15 ஆண்டுகளாக இருநாடுகளுக்கும் இடையேயான நல்லுறவு நிலையான முன்னேற்றம் கண்டுவருகிறது.

2017-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி போர்ச்சுகலுக்கு பயணம் செய்தார். அப்போது விண்வெளி, இரட்டை வரிவிதிப்பை தவிர்ப்பது, நானோ டெக்னாலஜி, பயோடெக்னாலஜி, உயர்கல்வி உள்பட பல்வேறு துறைகளில் 11 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது குறிப்பிடத்தக்கது.

குடியரசுத் தலைவர்  ராம்நாத் கோவிந்தை நேற்று மாலை போர்ச்சுகல் அதிபர் டிசோசாவை சந்தித்து பேசினார். அப்போது அவரை கவுரவிக்கும் வகையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவருக்கு விருந்து அளித்தார். டிசோசா மராட்டிய மாநிலம், கோவா ஆகிய இடங்களுக்கும் பயணம் செய்ய இருக்கிறார்.

dttamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *