பாட்டாளிகளின் நெஞ்சங்களில் நான் வாழ்கிறேன்: மருத்துவர் ராமதாஸ்

dttamil

சென்னை,

சூரியனை காணாவிட்டால் சூரியகாந்தி மலர் வாடுவது போல், பாட்டாளி தொண்டர்களை சந்திக்காவிட்டால் தனது முகம் வாடி, உள்ளம் வதங்கி விடும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார்.


பாட்டாளிகளின் நெஞ்சங்களில் நான் வாழ்கிறேன், என்ற தலைப்பில் மருத்துவர் ராமதாஸ் தனது முகநூல் (பேஸ்புக்) பக்கத்தில் உருக்கமான நீண்ட கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தக் கட்டுரையில் மருத்துவர் ராமதாஸ் கூறியிருப்பதாவது:-
எனது 40 ஆண்டு கால பொது வாழ்க்கை மிகவும் சிறப்பானது. தமிழகத்தின் பிற தலைவர்களுக்கு கிடைக்காத பல பேறுகளும், பெருமைகளும் எனக்கு கிடைத்திருக்கின்றன. என்னை குல தெய்வமாகவும், குடும்பத் தலைவனாகவும் பார்க்கும் லட்சக்கணக்கான தொண்டர்கள் கிடைத்ததை விட வேறு என்ன பாக்கியம் வேண்டும் எனக்கு?

சூரியனைக் காணா விட்டால் சூரியகாந்தி மலர் வாடி விடும். பாட்டாளி தொண்டர்களை தினமும் சந்திக்கா விட்டால் எனது முகம் வாடி விடும்; உள்ளம் வதங்கி விடும். இப்போது நான் அந்த நிலையில் தான் இருக்கிறேன்.
தைலாபுரம் தோட்டத்தில் நான் இருக்கும் நாட்களில் பாட்டாளிகள் பரவசத்துடன் வருவார்கள்; என்னை சந்திப்பார்கள்; மகிழ்ச்சியுடன் இல்லம் திரும்புவார்கள். அந்த ஒற்றை சந்திப்பு அவர்களை பல நாட்கள் உற்சாகத்துடன் கட்சிப் பணியாற்ற வைக்கும். எனக்கு உற்சாகத்தை தருபவையும் அந்த சந்திப்புகள் தான்.

என்னை சந்திப்பவர்களில் சிலர் ‘‘அய்யா தான் எனக்கு எல்லாம்’’ என்பார்கள்… உண்மை.

வேறு சிலரோ ‘‘அய்யா இல்லாவிட்டால் நான் இல்லை என்பார்கள்’’… அதுவும் உண்மை.

‘‘அய்யாவுக்கு நான் என்னென்றும் விசுவாசமாக இருப்பேன்’’ என்பவர்கள் இன்னொரு வகை…

அய்யாவை நான் கடவுளாக மதிக்கிறேன் என்பார்கள் சிலர். இதையெல்லாம் நான் விரும்புவதில்லை. ஆனாலும் பலர் தங்களின் உள்ளக்கிடக்கையை இப்படியாக வெளிப்படுத்துவார்கள்.

அய்யா தான் எங்கள் குல தெய்வம் என்பவர்களும், அய்யா தான் எங்கள் குடும்பத்தலைவர் என்பவர்களும் லட்சக்கணக்கில் இருக்கிறார்கள்.

இன்னும் சிலர், ‘‘அய்யா அவர்கள் போராடி பெற்றுக் கொடுத்த மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு காரணமாகத் தான் அரசு பணி பெற்று, இந்த நிலைக்கு உயர்ந்திருக்கிறேன். எனது வளர்ச்சிக்கு அய்யா தான் காரணம்’’ என்று நன்றியுடன் கூறுவார்கள்.

பலர் அவர்களின் இதயங்களில் எனக்கு இடம் ஒதுக்கி வைத்திருப்பார்கள்; அவர்கள் என் மீது காட்டும் அன்பு அளவில்லாதது. அவர்கள் கூறுவது அனைத்தும் உண்மை. அவர்கள் என் மீது காட்டும் அன்பு தூய்மையானது. அவர்களைப் பொறுத்தவரை அவர்களின் இதயங்களில் நான் வாழ்கிறேன்.

என்னை அவர்கள் எந்த நேரமும் நினைத்துக் கொண்டிருப்பதும், அவர்களை நான் எந்த நேரமும் நினைத்துக் கொண்டிருப்பதும் தான் பாட்டாளி மக்கள் கட்சி என்ற இயக்கம் கட்சியாக இல்லாமல் குடும்பமாக இருப்பதற்கு காரணம் ஆகும். அவர்கள் தான் என் உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்கள். அவர்கள் தான் என்னை இயங்கச் செய்யும் ஆதார சக்திகள்.

பாட்டாளி மக்கள் கட்சி என்பது ஆலமரம் போன்ற விழுதுகளைக் கொண்ட, தேக்கு மரம் போன்ற உறுதியான, மா, பலா, வாழை போன்ற சுவையான பழங்களைத் தரக் கூடிய அதிசய மரம் ஆகும். அந்த மரத்தின் ஆணி வேர் நான் என்றால் அதன் மலர்களாகவும், கனிகளாகவும், கிளைகளாகவும், இலைகளாகவும் இருப்பவர்கள் தான் பாட்டாளிகள் ஆவர். அவர்கள் ஒவ்வொருவரின் உழைப்பும் பாட்டாளி மக்கள் கட்சியை உயிர்ப்புடனும், மலர்ச்சியுடனும் வைத்திருக்கிறது.

ஓய்வறியாத உழைப்பாளி என்று அறியப்படும் கட்சித் தலைவர் ஜி.கே. மணி தமிழகத்தின் அனைத்து எல்லைகளையும் வாரத்திற்கு ஒரு முறை அளந்து விடும் அளவுக்கு கட்சிப் பணி செய்வதற்காக இயங்கிக் கொண்டிருப்பவர். காலையில் கன்னியாகுமரியில் கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருப்பார்; மாலையில் சென்னையில் கட்சி நிர்வாகிகளுடன் கலந்தாய்வு நடத்திக் கொண்டு இருப்பார். இடைப்பட்ட காலத்தில் நான் கொடுக்கும் கட்சிப் பணிகளையும் செவ்வனே செய்து முடிப்பார்.

கட்சியில் இருக்கும் கடைசி தொண்டனுக்கு ஏதேனும் பிரச்சினை வந்தால் கூட, சம்பந்தப்பட்டவர்கள் எந்த நிலையில் இருந்தாலும் அவர்களை அழைத்துப் பேசி சிக்கலைத் தீர்க்காமல் உறங்கச் செல்ல மாட்டார் அவர். பாட்டாளி மக்கள் கட்சி இன்றும் உயிரோட்டமாக இருப்பதற்கும், வளர்ச்சி அடைந்து வருவதற்கும் நமது தலைவர் ஜி.கே.மணி போன்றவர்களின் அர்ப்பணிப்பும், உழைப்பும் தான் காரணமாகும்.

இன்னொருவரை 43 ஆண்டுகளுக்கு முன் 1977-ஆம் ஆண்டு சென்னை எழும்பூரில் நடைபெற்ற ட்ரிப்பிள் எஸ் (SSS)என்றழைக்கப்படும் சமூக சேவை சங்கக் கூட்டத்தில் சந்தித்தேன். அவர் ஒரு ஏழை மில் தொழிலாளி. அன்று முதல் இன்று வரை என்னுடன் இணைந்து பணியாற்றி வருகிறார். என்னை அய்யா என்று அழைக்கும் அவர், மற்றவர்கள் அனைவரையும் வயது வித்தியாசமின்றி அழைப்பது அண்ணாச்சி என்று தான். அதேபோல், கட்சியில் புதிதாக சேர்ந்த உறுப்பினராக இருந்தாலும், கட்சித் தலைவராக இருந்தாலும் அனைவருக்கும் அவர் அண்ணாச்சி தான். கடந்த 43 ஆண்டுகளில் அவர் யாரையும் கடிந்து கொண்டு நான் பார்த்ததில்லை; ஆனால், யாராக இருந்தாலும் அவர்களிடமிருந்து வேலை வாங்கி விடுவார். எந்தப் பணியையும் அவரிடம் நம்பி ஒப்படைக்கலாம்; அது சிறப்பாக அமையும்.

இப்படிப்பட்ட அந்த உழைப்பாளிக்கு அதிகார பதவிகள் எதையும் நாம் கொடுக்கவில்லை; இணைப் பொதுச்செயலாளர் என்ற கட்சிப் பதவியைத் தான் அவருக்கு கொடுத்திருக்கிறோம். அதுவும் கூட பதவி இல்லை…. பொறுப்பு. அந்த பொறுப்பை மிகச்சிறப்பாக அவர் நிறைவேற்றி வருகிறார். அவரைப் பற்றி இவ்வளவு கூறும் நான், இதுவரை அவரது பெயரையோ, ஊரையோ கூறவில்லை. காரணம் அதற்கான அவசியம் இருப்பதாகத் தோன்றவில்லை. அவரைப் பற்றிய முதல் வாக்கியத்திலேயே அவரை நீங்கள் அடையாளம் கண்டு கொண்டிருப்பீர்கள் என்ற நம்பிக்கை தான் இதற்கு காரணம். இருந்தாலும் இந்த முகநூல் பதிவை படிக்கும் பாட்டாளிகள் அல்லாத புதியவர்கள் புரிந்து கொள்வதற்காக சொல்கிறேன் அவர் தான் நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தைச் சேர்ந்த நமது இசக்கி படையாட்சி அவர்கள்.

இசக்கி படையாட்சி போன்ற லட்சக்கணக்கான, கோடிக்கணக்கான பாட்டாளி நெஞ்சங்கள் எனது இதயத்தில் இடம் பிடித்திருக்கிறார்கள். அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் உழைப்பு… உழைப்பு… உழைப்பு தான்.
திருக்கச்சூர் ஆறுமுகம், கீ.லோ. இளவழகன், என்.டி. சண்முகம் போன்றவர்கள் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தால் கூட, கட்சிப் பணி என்று வந்து விட்டால், எதைப்பற்றியும் கவலைப்படாமல் களமிறங்கி காரியத்தை நிறைவேற்றுவார்கள். இத்தகைய அர்ப்பணிப்பு உணர்வு கொண்டவர்கள் தான் பாட்டாளி மக்கள் கட்சிக்கும், எனக்கும் மிகப்பெரிய சொத்து என்றால் அது மிகையல்ல.

பாட்டாளி மக்கள் கட்சியை விட்டு அற்ப காரணங்களுக்காக விலகிச் சென்றாலும் கூட என் மீது மிகுந்த பாசமும், மரியாதையும் வைத்திருக்கும் பழைய பாட்டாளிகள் ஏராளம் உண்டு. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கட்சியிலிருந்து விலகிய சிலரை அவர்களுக்கு உதாரணமாக கூறலாம். அவர்கள் இப்போது கட்சியில் இல்லை. ஆனாலும், இன்று மாலை அவர்களை அழைக்க வேண்டும் என்று நான் நினைத்தால், நான் அழைப்பதற்கு முன் இன்று மதியமே தோட்டத்திற்கு ஓடி வந்து நிற்பார்கள். அந்த அளவுக்கு அவர்கள் என் மீது அன்பும், நேசமும் கொண்டவர்கள்.

மேற்கண்ட பத்திகளில் அய்யா அவர்கள் குறிப்பிட்ட உழைப்புக்கும், அர்ப்பணிப்புக்கும் உதாரணமாக நாமும் இருக்கிறோமே… ஆனால், அய்யா அவர்கள் நமது பெயரை குறிப்பிடவில்லையே? என்ற எண்ணம் சிலருக்கு ஏற்படலாம். அப்படியெல்லாம் எவரும் நினைக்கத் தேவையில்லை. ஒவ்வொரு குழந்தையின் குணாதிசயத்தையும் ஒரு தாய் எப்படி அறிந்திருப்பாளோ, அதேபோல அனைத்து பாட்டாளிகளின் உழைப்பையும், அர்ப்பணிப்பையும் நான் அறிவேன். நான் ஏற்கனவே குறிப்பிட்டதைப் போல பாட்டாளி மக்கள் கட்சி பல வகையான பழங்கள் காய்க்கும் அதிசய மரம். ஒவ்வொரு கனிக்கும் ஓர் உதாரணம் கூறினால் போதுமானது என்ற எண்ணத்தில் தான் சிலரை மட்டும் இங்கு நான் குறிப்பிடுகிறேன். தலைவரின் உழைப்பையும், இசக்கிப் படையாட்சியின் அர்ப்பணிப்பையும் பற்றி குறிப்பிடும் போது அவர்கள் மட்டுமே எனது மனக்கண்களில் நிற்பதில்லை. அவர்களைப் போன்று உழைப்பவர்கள் அனைவரும் தான் வந்து போகின்றனர். அதேபோல், யாரெல்லாம் உழைப்புக்கும், அர்ப்பணிப்புக்கும் உதாரணமாக இருக்கிறீர்களோ, அவர்கள் அனைவருமே நான் உங்களைத் தான் குறிப்பிடுவதாக நினைத்துக் கொள்ள வேண்டும்; இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும்.

பத்துக்கு ஒன்று பழுது என்று கிராமப்புறங்களில் கூறப்படுவதை உங்களில் பலர் கேட்டிருக்கக்கூடும். அதைப் போலத் தான் நமது கட்சியிலும் சில பழுதுகள் இருந்ததுண்டு. அவை அனைத்தும் கடந்து போக வேண்டிய கறுப்பு பக்கங்கள்.

நாம் கட்சி தொடங்கிய போது பொதுச்செயலாளர் பதவியை முதன்முதலாக ஒருவருக்கு கொடுத்து அழகு பார்த்தோம். அவர் தான் நமது இயக்கத்தின் முதல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். தில்லியில் பா.ம.க.வுக்கு கிடைத்த முதல் மத்திய அமைச்சர் பதவியையும் அவருக்கே கொடுத்து மகிழ்ந்தோம்.

பதவி சுகம் என்றால் என்னவென்று எனக்கு தெரியாது. என்னைப் பொறுத்தவரை பதவி என்பது மக்களுக்கு சேவை வழங்குவதற்காக நமக்கு தரப்பட்ட வாய்ப்பு ஆகும். ஆனால், திராவிடக் கட்சியினரைப் போன்று பதவி சுகத்தை திகட்ட திகட்ட அனுபவித்து விட்டு, முதுகில் குத்தி விட்டு அவர் சென்றார். அப்படிப்பட்டவர்களும் இங்கு இருந்ததுண்டு.

கம்பிக்கு வெளியில் காத்துக் கிடந்தவர்களுக்குக் கூட நாம் அடையாளம் கொடுத்தோம்; அதிகார பதவிகளை வழங்கி பெரிய மனிதர்களாக்கினோம். ஆனால், அவர்கள் நமக்கு அளித்த நன்றிக் கடன் என்பது நாம் கொடுத்த அடையாளத்தை பயன்படுத்தி எதிரிகளின் மேடைகளில் ஏறி, நமக்கு எதிராக நரகல் நடையில் பேசியது தான்.

இன்னொருவர் இருந்தார். ‘‘அண்ணாச்சி… உங்கள் தொடை மீது தான் எனது உயிர் பிரியும்’’ என்று வசனம் பேசியவர். அவரையும் மத்திய அமைச்சராக்கினோம். பின்னர் நிறம் மாறி, வேறு முகாமுக்கு சென்று விட்டார். இப்படிப்பட்டவர்களை நாம் ஒரு காலத்தில் வளர்த்து விட்டிருக்கிறோம்.

ஒரு மனிதன் எப்படியெல்லாம் நிலை மாறுவான் என்பதற்கு உதாரணங்களாக இருந்தவர்களும் நம்முடன் பயணித்திருக்கிறார்கள். சேலம் மாவட்டத்தை சேர்ந்த மிகச் சாதாரணமான தொண்டர் அவர். அவரை சேலம் மாவட்டத்தில் நமது கோட்டையாக கருதப்படும் தொகுதியில் நிறுத்தி வெற்றி பெறச் செய்து சட்டப்பேரவை உறுப்பினராக்கி அழகு பார்த்தேன். அவரது மகனுக்கு அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஒரு பைசா கூட செலவில்லாமல் மருத்துவப் படிப்புக்கு இடம் வாங்கிக் கொடுத்தேன்.

ஒரு கட்டத்தில் அவரது மகனுக்கு திருமணம் நடத்த விரும்பி தேதி கேட்டார். நானும் தேதி கொடுத்து விட்டு, எந்த இடத்தில் திருமணம் என்று கேட்டேன். அதற்கு பதிலளித்த அவர்,‘‘ அய்யா வாழும் இடம் தான் எங்களுக்கு கோவில். அதனால் தைலாபுரம் தோட்டத்தில் தான் திருமணத்தை நடத்தி வைக்க வேண்டும்’’ என்று கூறினார். நானும் ஒப்புக்கொண்டு நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினேன்.

அதன்பின் சில காலம் கழித்து அவர் கூடா நட்பால் நம்மிடமிருந்து விலகிச் சென்றார். விலகிச் சென்ற பிறகு பொதுக்கூட்ட மேடைகளில் என்னை மிக மோசமாக விமர்சித்தார். உச்சக்கட்டமாக எனது தலையை எடுத்து விடுவதாக மிரட்டல் விடுத்தார். நான் வாழும் இடம் தான் கோவில் என்று கூறியவர், எனது தலையை எடுப்பேன் என்று கூறும் அளவுக்கு மாறுகிறார்கள் என்றால் இவர்களை எந்தப் பட்டியலில் சேர்ப்பது? சில நேரங்களில் இது போன்ற சிலரும் என்னுடன் பயணித்திருக்கின்றனர்.

இதுபோன்ற மனிதர்களுடனான அனுபவத்துக்குப் பிறகு விசுவாசம் என்ற வார்த்தை எனக்கு வெறுப்பைத் தரத் தொடங்கி விட்டது. அதன்பின்னர் என்னிடம் உதவி கேட்டு வந்து, அதைப் பெற்றுக் கொண்டவர்கள், ‘‘அய்யா நாங்கள் எப்போதும் விசுவாசத்துடன் இருப்போம்’’ என்று கூறினால், அதை நான் ஏற்பதில்லை. ‘‘ விசுவாசம் என்ற வார்த்தையை கெட்ட வார்த்தையாக நினைக்கத் தொடங்கி நீண்ட காலமாகி விட்டது. நீங்கள் என்னுடன் பாசமாக இருந்தால் அதுவே போதும்’’ என்று கூறி அனுப்பி வைப்பேன்.

என் உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்களே…

நான் ஏற்கனவே குறிப்பிட்டதைப் போல பாட்டாளி மக்கள் கட்சி ஆலமரத்தின் விழுதுகளையும், விதவிதமான கனிகளையும் வழங்கும் அதிசய மரம் ஆகும். அதன் கனிகளும், மலர்களும், கிளைகளும், இலைகளும் நமது பாட்டாளிகள் என்றால், அந்த மரத்தில் தங்கி இளைப்பாறிச் செல்வதற்காக சிலர் வந்து செல்வதுண்டு. அவர்கள் தான் இவர்கள். இவர்களைப் பற்றி நாம் நினைப்பது கூட கிடையாது. ஆனால், உண்மையான பாட்டாளிகளை சந்திக்காத வருத்தத்தில் தூக்கம் வராமல் தவிக்கும் போது இவர்களின் நினைவுகள் வந்துவிடுகிறது. அதனால் இதையும் பதிவு செய்ய வேண்டியதாகிவிட்டது.

இப்போதும் கூட நமது கட்சியில் பலர் இருக்கிறார்கள். கூலிக்கு மாரடிப்பவர்கள் எவரேனும் ஏதேனும் தளத்தில் நின்று என்னை விமர்சனம் செய்தால், அதை தாங்கிக் கொள்ள முடியாமல் அவர்களைத் தாக்க பாய்வார்கள். மருத்துவர் அய்யாவை விமர்சிப்பது நமது இனத்தையே விமர்சிப்பதாகத் தான் அர்த்தம் என்பது அவர்களின் வாதம்.

இன்னும் சிலர் இருக்கிறார்கள். அவர்களுக்கு நாம் தான் அடையாளம். ஆனால், நம்மை எவரேனும் விமர்சித்தால் அவர்களுக்கு கோபம் வராது. அதுமட்டுமல்ல…. வேறு தளம் கிடைத்தால், நம்மை விமர்சித்தவர்கள், நமக்கு எதிராக சதி செய்பவர்களுக்காக பரிந்து பேசவும் தயங்க மாட்டார்கள்.

என்ன செய்வது…. இந்த உலகில் கொரோனாக்களை மட்டுமல்ல துரோகங்களையும் தாங்கிக் கொண்டு தான் வாழ வேண்டியிருக்கிறது.

அனைத்து மனக்காயங்களுக்கும் ஓர் அருமருந்து உண்டு. அது தான் பாட்டாளிகளுடனான எனது சந்திப்பு.

ஆனால், கொரோனா காலத்து கொடுந்தண்டனையான ஊரடங்கு காரணமாக கடந்த இரு மாதங்களாக பாட்டாளிகளை சந்திக்க முடியாமல் போய்விட்டது. அதுவே என்னை கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாக்கியிருக்கிறது. ஊரடங்கு காலம் எப்போது முடியும்? கொரோனா கட்டுப்பாடுகள் எப்போது தளரும்? எப்போது பாட்டாளிகளை சந்தித்து நலம் விசாரிக்கலாம்? என்று ஏங்கிக் கொண்டிருக்கிறேன். அந்த நாள் வருவதற்காக நான் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன். நீங்களும் அதே எண்ணத்தில் தான் இருப்பீர்கள் என்பதை நான் அறிவேன். விரைவில் சந்திப்போம்.! இவ்வாறு மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

உத்தரப் பிரதேசத்தில், சுய உதவிக் குழுக்களுக்கு 219 கோடி நிதி ஒதுக்கீடு

சென்னை, சூரியனை காணாவிட்டால் சூரியகாந்தி மலர் வாடுவது போல், பாட்டாளி தொண்டர்களை சந்திக்காவிட்டால் தனது முகம் வாடி, உள்ளம் வதங்கி விடும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார். பாட்டாளிகளின் நெஞ்சங்களில் நான் வாழ்கிறேன், என்ற தலைப்பில் மருத்துவர் ராமதாஸ் தனது முகநூல் (பேஸ்புக்) பக்கத்தில் உருக்கமான நீண்ட கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தக் கட்டுரையில் மருத்துவர் ராமதாஸ் கூறியிருப்பதாவது:- எனது 40 ஆண்டு கால பொது வாழ்க்கை […]

Subscribe US Now