திசையன்விளை,
நெல்லை மாவட்டம் திசையன்விளையில் சுடலை ஆண்டவர் கோவில் கொடைவிழா வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது.
நெல்லை மாவட்டம் திசையன்விளையில் பிரசித்தி பெற்ற சுடலை ஆண்டவர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் கொடை விழா வெகு சிறப்பாக நடப்பது வழக்கம். 6 நாட்கள் நடைபெறும் கொடைவிழாவானது ஆவணி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வெள்ளிக்கிழமை வரை நடைபெறும். இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக தொடங்கியது. முன்னதாக கொடை விழா தொடங்கவதற்கு 41 நாட்களுக்கு முன்பு கால்நாட்டு விழா நடைபெற்றது. அன்றிலிருந்து தினமும் இரவு 8 மணிக்கு சுடலை ஆண்டவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. மேலும் தினமும் இரவு அன்னதானமும் நடைபெறுகிறது. கொடை விழாவின் ஓவ்வொரு நாளும் காலையும், இரவும் சுடலை ஆண்டவருக்கு சிறப்பு பூஜையும் இரவு 1 மணிக்கு அலங்கார பூஜையும் நடைபெறுகிறது. முதல் நாளான ஞாயிற்றுக் கிழமை பகல் நேரங்களில் பள்ளி மாணவ, மாணவியருக்கான விளையாட்டுப்போட்டிகள் நடைபெற்றது. மேலும் பெரியவர்கள் கலந்துகொள்ளும் வடம் இழுத்தல் போன்ற விளையாட்டுகள் நடத்தபட்டது. இரவு 8 மணிக்கு சுடலை ஆண்டவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
அதேபோல் அடுத்தடுத்த நாட்களில் பெண்களுக்கான சுமங்கலி பூஜை, திருவிளக்கு பூஜை போன்றவையும் இரவு சுடலை ஆண்டவருக்கு சிறப்பு பூஜையும், பின்னர் அலங்கார பூஜையும் நடைபெற்றது. வியாழக்கிழமை(22ந் தேதி) இரவு 12.30 மணியளவில் விரதமிருந்த பக்தர்கள் பால்குடம் எடுத்து பவனியாக சுடலை ஆண்டவர் கோவிலுக்கு சென்றனர். அதன் பின்னர் சுடலை ஆண்டவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மேலும் கோவிலில் சாமி ஆட்டமும் நடைபெறுகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுடலை ஆண்டவரை தரிசனம் செய்து வருகின்றனர். கடைசி நாளான இன்று (வெள்ளிக்கிழமை) காலை விரதமிருந்த சிறுமிகளும், பெண்களும் மஞ்சள் பெட்டி எடுத்து ஊரின் முக்கிய வீதிகள் வழியாக கோவிலுக்கு சென்றனர். மஞ்சள் பெட்டிக்கான தாம்பூலத்தில் தேங்காய், பழம், மஞ்சள், கும்குமம், வெற்றிலை, பாக்கு உள்ளிட்டவைகள் வைக்கப்பட்டிருக்கும். பவணியாக மதியம் சுடலை ஆண்டவர் கோவிலை அடைந்ததும் சிறப்பு பூஜையும் சாமி ஆட்டமும் நடைபெற்றது. நாள் முழுவதும் கோவிலில் அன்னதானம் வழங்கப்படுகிறது. பின்னர் நள்ளிரவு 12 மணியளவில் சாமிக்கு சிறப்பு பூஜைகளும், சாமி ஆட்டமும் நடைபெறும். சாமி மயான வேட்டைக்கு செல்லும் நிகழ்வு, முட்டை எறிதல் போன்றவைகளை காண பக்தர்கள் கூட்டம் அலைமோதும். திசையன்விளையின் பிரசித்தி பெற்ற கோவிலான சுடலை ஆண்டவர் கோவில் கொடை விழாவின் கடைசி நாளான வெள்ளிக்கிழமை ஒவ்வொரு ஆண்டும் உள்ளுர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோவில் கொடை விழாவை முன்னிட்டு ஊரின் வெவ்வேறு பகுதிகளில் கச்சேரி நடைபெறுகிறது. கோவிலின் வெவ்வேறு பகுதிகளில் சிலம்பாட்டம், கரகாட்டம், கும்பாட்டம், கச்சேரி போன்றவை நடத்தப்படும். பின்னர் சனிக்கிழமை காலை ஊரில் ஏராளமானோர் சுடலை ஆண்டவருக்கு நேர்த்திக் கடன் செலுத்துவர். பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டு கொடை விழா நிறைவடைகிறது. சாதி, மத, பேதமின்றி வெவ்வேறு மத்தினரும் அங்கு வருவது கோவிலின் தனிச்சிறப்பு.