கொரோனா வைரஸ் எதிரொலி: மராட்டிய நகர்ப்புறங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

மும்பை,

மராட்டியத்தில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு வருகிற 31ந் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. அதேநேரம் பொதுத் தேர்வுகள் திட்டமிட்டப்படி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சீனாவில் இருந்து வேகமாக பரவிய ஆட்கொல்லி கொரோனா வைரஸ் நோய் இந்தியாவையும் அச்சுறுத்தி வருகிறது.

மராட்டியத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 ஆக இருந்தது. இதற்கு மத்தியில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, ஆட்கொல்லி நோய் பரவல் தடுக்கும் சட்டத்தின் கீழ் அரசு எடுத்துள்ள பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.

இதன்படி வருகிற 30-ந் தேதி வரை மும்பை, தானே, நவிமும்பை, நாக்பூா், பிம்பிரி -சின்ஞ்ச்வாட், புனே ஆகிய நகரங்களில் உள்ள தியேட்டர்கள், உடற்பயிற்சி கூடங்கள்(ஜிம்), நீச்சல் குளங்கள், பூங்காக்கள் மூடப்படும்.

அடுத்த உத்தரவு வரும் வரை புனே மற்றும் பிம்பிரி- சின்ஞ்ச்வாட்டில் பள்ளி, கல்லூரிகளும் மூடப்படும். மேலும் பொதுமக்கள் வணிக வளாகங்கள், ஓட்டல்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் நேற்று மும்பை, புனேயில் தலா 5 பேருக்கும், யவத்மாலில் 2 பேருக்கும், நாக்பூர், அகமத்நகரில் தலா ஒருவருக்கும் என 14 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

இவர்களில் நாக்பூரில் தற்போது கொரோனா பாதித்தவர் 43 வயது ஆண் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இவர் நாக்பூரின் முதல் கொரோனா நோயாளியாக கண்டறியப்பட்டவருடன் அமெரிக்கா சென்று திரும்பியது தெரியவந்துள்ளது.

இதேபோல யவத்மால், அகமத்நகரில் பாதிக்கப்பட்ட 3 பேரும் சமீபத்தில் துபாயில் இருந்து திரும்பியவர்கள் ஆவர். இதன் மூலம் மராட்டியத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இது வரை 31 ஆக உயர்ந்து உள்ளது.

அதன்படி புனேயில் 15 பேரும், மும்பையில் 8 பேரும், நாக்பூரில் 4 பேரும், யவத்மாலில் 2 பேரும், தானே, அகமத்நகரில் தலா ஒருவரும் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக மாநில சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே தெரிவித்து உள்ளார்.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதை அடுத்து மராட்டிய அரசு மாநகராட்சி, நகராட்சி மற்றும் நகர பஞ்சாயத்து பகுதிகளில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு வருகிற 31-ந் தேதி வரை விடுமுறை அறிவித்துள்ளது.

இருப்பினும் 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மற்றும் பல்கலைக்கழக தேர்வுகள் திட்டமிட்டபடி நடக்கும் என தெரிவித்துள்ளது. இந்த நிலையில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மும்பை ஐகோர்ட்டு மற்றும் ஐகோர்ட்டின் நாக்பூர், அவுரங்காபாத் கிளைகளில் நாளை (திங்கட்கிழமை) முதல் ஒரு வார காலத்துக்கு அவசர வழக்குகள் மட்டுமே விசாரிக்கப்படும் என ஐகோர்ட்டு பதிவாளர் வெளியிட்டு உள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

dttamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *