சண்டிகர்,
அரியானாவில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுமி உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
அரியானா மாநிலம் கர்னால் மாவட்டம் ஹர்சிங் புரா கிராமத்தில் நேற்று மாலை தன் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமி, அங்கு திறந்த நிலையில் இருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துவிட்டாள்.
இதுபற்றி காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சிறுமியை மீட்கும் பணியை தொடங்கினர்.
50 அடி ஆழம் கொண்ட அந்த ஆழ்துளை கிணற்றின் அருகே பொக்லைன் எந்திரம் மூலம் பெரிய பள்ளம் தோண்டப்பட்டு வருகிறது. ஆழ்துளை கிணற்றில் சிறுமி இருக்கும் ஆழம் வரை பள்ளம் தோண்டியதும், பக்கவாட்டில் சுரங்கம் தோண்டி, சிறுமியை மீட்பதற்கான பணிகள் நடைபெற்றன.
போர்வெல்லுக்குள் ஆக்ஸிஜன் சப்ளை செய்யப்பட்டது. சிறுமிக்கு பாதுகாப்பு உணர்வைத் தரும் வகையில் பெற்றோரின் குரலின் ஆடியோ பதிவு செய்து சிறுமிக்கு கேட்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு வந்தது.
10 மணி நேரம் கழித்து சிறுமி மீட்கப்பட்டார். இருந்தாலும் சிறுமி உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.