லண்டனில் பொதுமக்கள் மீது கத்தியால் தாக்குதல் நடத்திய நபர்: 2 பேர் பலி

லண்டன்,

இங்கிலாந்தின் லண்டன் பாலத்தில் சென்ற மக்கள்மீது நடத்தப்பட்ட கத்திக்குத்து தாக்குதல் அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள பிரசித்தி பெற்ற லண்டன் பாலத்தில் சென்று கொண்டிருந்த பொதுமக்கள் மீது மர்ம நபர் ஒருவர் திடீரென தாக்குதல் நடத்தினார்.  சரமாரியாக அவர் கத்தியால் குத்தியதில் இருவர் உயிரிழந்தனர். மர்ம நபர் கத்தியால் தாக்கியதில் பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார் தாக்குதல் நடத்திய மர்ம நபரை பாலத்தின் அருகே துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர். பயங்கரவாத தாக்குதல் சம்பவமாக கருதி விசாரித்து வருவதாக ஸ்காட்லாந்து யார்டு போலீசார் தெரிவித்தனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன், லண்டன் பாலம் அருகே மூன்று பேர், கத்தியால் நடத்திய தாக்குதலில் 8 பேர் உயிரிழந்த சம்பவத்தை, மேற்கூறிய தாக்குதல் சம்பவம் நினைவு படுத்தியது.

இந்த தாக்குதலையடுத்து, லண்டன் மேம்பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

இங்கிலாந்தில் பொதுத்தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், இந்த தாக்குதல் நடைபெற்றிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது.

இங்கிலாந்து பிரதமர் தனது தொகுதி பயணத்தை ரத்து செய்து விட்டு,உடனடியாக லண்டன் திரும்பினார். இங்கிலாந்தின் அவசரக்குழுவுடன் ஆலோசனை நடத்தினார்.

dttamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *