மராட்டிய மாநிலத்தில் குடியரசுத் தலைவர்ஆட்சி அமல்

dttamil

மும்பை,

மராட்டிய மாநிலத்தில் ஆளுநரின் பரிந்துரையை ஏற்று குடியரசுத் தலைவர் ஆட்சியை பிரகடனம் செய்தார்  ராம்நாத் கோவிந்த்.

288 உறுப்பினர்களை கொண்ட மராட்டிய சட்டசபைக்கு நடந்த தேர்தலில் வெற்றி பெற்ற பாரதீய ஜனதா – சிவசேனா கூட்டணியில் மோதல் ஏற்பட்டதால் அந்த கட்சிகளால் ஆட்சி அமைக்க முடியாமல் போனது.

முதல்வர் பதவியை சுழற்சி முறையில் தங்களுக்கு 2½ ஆண்டுகள் தருமாறு சிவசேனா விடுத்த கோரிக்கையை ஏற்க பாரதீய ஜனதா மறுத்ததே இதற்கு முக்கிய காரணம் ஆகும்.

இதையடுத்து 105 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக விளங்கும் பாரதீய ஜனதாவிடம், ஆட்சி அமைக்க விருப்பமா? என்று ஆளுநர் பகத்சிங் கோஷியாரி கேட்க, அந்த கட்சி விருப்பம் இல்லை என்று கூறிவிட்டது.

இதனால் 56 இடங்களில் வெற்றி பெற்றுள்ள 2-வது பெரிய கட்சியான சிவசேனாவை நேற்று முன்தினம்  ஆளுநர், ஆட்சி அமைக்க அழைத்தார். இதனால் ஆட்சி அமைக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கிய சிவசேனா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் ஆதரவை நாடியது.

இந்த நிலையில் ஆதித்ய தாக்கரே மற்றும் சட்டசபை சிவசேனா தலைவராக தேர்வு செய்யப்பட்ட ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் மாலையில் மும்பையில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்று ஆளுநர் பகத்சிங் கோஷியாரியை சந்தித்து பேசினார்கள்.

சிவசேனா குழுவினர் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க விருப்பம் தெரிவித்தனர். மேலும் ஆதரவு கடிதங்களை அளிக்க 3 நாட்கள் அவகாசம் கேட்டனர். ஆனால் அவகாசம் அளிக்க  ஆளுநர் மறுத்து விட்டார்.

அடுத்து 3வது கட்சியான தேசியவாத காங்கிரஸ் கட்சியால் ஆட்சி அமைக்க முடியுமா? என்பது பற்றி இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 8.30 மணிக்குள் தன்னிடம் தெரிவிக்குமாறு அவர்களிடம் ஆளுநர் கேட்டுக் கொண்டார்.

இதனால் மராட்டிய அரசியலில் மீண்டும் குழப்பம் ஏற்பட்டு உள்ளது. இரவு 8.30 மணிக்குள் எம்.எல்.ஏ.க்கள் பற்றிய விவரங்களை வழங்குவது கடினம் என்று தேசியவாத காங்கிரஸ் மாநில  தலைவர் அஜித் பவார் கூறி உள்ளார்.

இருந்தாலும்  சரத்பவார் காங்கிரசுடன் சேர்ந்து  ஆட்சி அமைப்பதில் தீவிரம் காட்டி வருகிறார். இருப்பினும் சட்டப்பேரவை பதவிக் காலம் முடிந்துவிட்டதால் மராட்டியத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துமாறு மத்திய அரசுக்கு ஆளுநர் பரிந்துரை  செய்து உள்ளார்.

இதை தொடர்ந்து இன்று பிரதமர் மோதி தலைமையில் நடைபெற்ற  மத்திய அமைச்சரவை கூட்டத்தில்  இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.  குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தும் இதற்கு ஒப்புதல் அளித்து உள்ளார். இதை தொடர்ந்து மராட்டியத்தில் குடியரசுத் தலைவர்  ஆட்சி அமலுக்கு வந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு

மும்பை, மராட்டிய மாநிலத்தில் ஆளுநரின் பரிந்துரையை ஏற்று குடியரசுத் தலைவர் ஆட்சியை பிரகடனம் செய்தார்  ராம்நாத் கோவிந்த். 288 உறுப்பினர்களை கொண்ட மராட்டிய சட்டசபைக்கு நடந்த தேர்தலில் வெற்றி பெற்ற பாரதீய ஜனதா – சிவசேனா கூட்டணியில் மோதல் ஏற்பட்டதால் அந்த கட்சிகளால் ஆட்சி அமைக்க முடியாமல் போனது. முதல்வர் பதவியை சுழற்சி முறையில் தங்களுக்கு 2½ ஆண்டுகள் தருமாறு சிவசேனா விடுத்த கோரிக்கையை ஏற்க பாரதீய ஜனதா மறுத்ததே […]

You May Like

Subscribe US Now