சாதித்துவத்தால் உருவான சமத்துவ மார்க்கம்

Dt Tamil

இன்றைய நவீன உலகில் பொருளாதாரத்திலும், தொழில்நுட்பத்திலும் எவ்வளவோ முன்னேற்றம் ஏற்பட்டிருந்தாலும், சாதி பிரச்சனைகள் மட்டும் இன்னும் ஓய்ந்தபாடில்லை. சாதிக் கொடுமைகளை கண்டித்து எத்தனையோ தலைவர் போராடியுள்ளனர். ஆனால் இன்னும் சாதிக் கொடுமைகளும், ஆணவக் கொலைகளும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் சாதிக் கொடுமைகளை எதிர்த்து, சமத்துவத்தைக் கூறி தனக்கென தனி மார்க்கத்தையே தோற்றுவித்தவர் அய்யா வைகுண்டர்.

1809 – ம் ஆண்டு சுவாமிதோப்பு கிராமத்தில் பொன்னுமாடன், வெயிலாள் என்பவருக்கு மகனாகப் பிறந்தார், முடி சூடும் பெருமாள் என்று பெயர் சூட்டப்பட்ட இவரது பெயருக்கு இருந்த எதிர்ப்பு காரணமாக, பெற்றோர் இவரது பெயரை முத்துக்குட்டி என்று மாற்றம் செய்தனர். திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் தோள் சேலைக்கு வரி, செருப்புக்கு வரி, மாராப்புக்கு வரி, தலைமுடிக்கும் வரி என்று தாழ்த்தப்பட்டவர்கள் மிகவும் மோசமாக நடத்தப்பட்டனர்.

பனையேறி நாடார், நாயர், ஈழவர், பரவர் உட்பட தாழ்த்தப்பட்ட 18 சமூகத்தை சேர்ந்த பெண்கள் மேலாடை அணிய அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. பனையேறி நாடார் பெண்கள் தாங்கள் எவ்வாறு உடை அணிய வேண்டும் என்று சட்டம் விதிக்க யாருக்கும் உரிமை இல்லை என்று கூறி அச்சட்டத்தை மீறினார்கள். ஆனால் நாடான் என்ற பட்டங்களுக்குள்ள நிலமைக்காரர் நாடார்கள் உயர் சாதியினர் போன்று மேலாடை அணிந்துகொள்ள முழு உரிமை இருந்தது. இதற்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டமே தோள் சீலைப்போராட்டம் எனப்பட்டது.

இக்கொடுமையான காலக்கட்டத்தில் திருச்செந்தூர் கடலில் திருவருள் பெற்று வந்த அய்யா வைகுண்டர் சாதிக் கொடுமைகளையும், தீண்டாமையையும் எதிர்த்தார். “மானமாய் வாழ்ந்தால் மாலும் கலி தன்னாலே” என்ற அவரது வாக்கு மக்களை பெரிதும் ஈர்த்தது. மக்கள் அவரை பின்பற்ற தொடங்கினர். யாருக்கும் அடிபணிய அவசியம் இல்லை என்று கூறி தலைப்பாகை அணிந்து வரச் சொன்னார். மக்காள் என்று வட்டார வழக்கில் பேசி சமத்துவத்தை வளர்த்த விதம் தனிச்சிறப்புக்குரியது.

தாழ்த்தப்பட்ட மக்கள் கோவிலுக்குள் செல்லக்கூடாது அது தர்மம் ஆகாது என்று உயர்சாதியினர் கூறியபோது, “தர்மம் பெரிது தாங்கி இருங்கோ மக்காள், தாழக்கிடப்பாரை தற்காப்பதே தர்மம்” என்று அய்யா வைகுண்டர் கூறினார். சாதிக்கொரு கிணறு என்று இருந்த காலத்தில் அனைவரும் சமத்துவக் கிணறு கட்டி ஒரே கிணறில் நீர் எடுக்க செய்தார். தீண்டாமை பெரிதும் இருந்ததால் தொட்டு நாமம் சாற்றும் முறையை கொண்டு வந்தார்.

கோவிலில் பலி கொடுத்தல், காணிக்கை வழங்குதல், தேங்காய் உடைத்தல், கற்பூரம் ஏற்றுதல் என அனைத்து இந்து சமய முறைகளையும் எதிர்த்தார். “காணிக்கை வேண்டாதுங்கோ, தர்மம் செய்து தழைத்திடுங்கோ” என்றார். “ நீ தேடும் இறைவன் உனக்குள்ளே இருக்கிறான் கண்ணாடியில் தெரியும் நீயே கடவுள் உனக்குள் சுடர்விடும் ஒளியே கடவுள்” என்று கூறிய அவரது தாங்கல்களிலும் சுடர் வடிவில் ஆன கண்ணாடியே உள்ளது. சாதிக்கொடுமையினாலும், தாழ்த்தப்பட்டவருக்கு இழைக்கப்பட்ட அநீதியாலும் இந்து சமயத்திலிருந்து தன்னை முற்றிலும் வேறுபடுத்தி, தனக்கென தனி மார்க்கத்தை உருவாக்கி அதையே மற்றவர்களுக்கும் போதித்த அய்யா வைகுண்டர் 1851-ம் ஆண்டு ஜுன் 2-ம் தேதி மறைந்தார்.

மேலும் கிறிஸ்தவ மிஸனரிகளும் தாழ்த்தப்பட்வர்களை ஆதரித்ததால் பலர் கிறிஸ்தவர்களாக, சிலர் இஸ்லாமியர்களாகவும் மதம் மாறினர். ஏறக்குறைய 50 ஆண்டுகள் தொடர்ந்த போராட்டத்தில் திருவிதாங்கூர் மகாராஜா 1859-ம் ஆண்டு ஜீலை மாதம் 26-ம் நாள் தாழ்த்தப்பட்டவர்களும் மேலாடை அணியலாம் என்று பிரகடனம் செய்தார். சாதிக் கொடுமைகளால் மதம் மாறியவர்களையும், அய்யா வழி சென்றவர்களையும் பார்க்கும் போது நமது முன்னோர்கள் பட்ட துன்பங்கள் பெரிது என்பது நிதர்சனமான உண்மை என்று தெரிகிறது.

திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் கிறிஸ்தவ நாடார்கள் அதிகம் உள்ளனர். இந்து சமயத்திலிருந்தும் சில கொள்கைகளிலிருந்தும் மாறுபடுகின்ற அய்யாவழி சமயத்தை பின்பற்றுவோர் பெரும்பாலும் நாடார் சமூகத்தவர்களாகவே உள்ளனர். “பொறுமையாய் இருங்க மக்காள் பூவுலகம் ஆள வைப்பேன்” என்ற அய்யாவின் வார்த்தைக்கேற்ப சாதியைக் காட்டி விரட்டிய காவியும், சமத்துவத்தை நிலை நிறுத்த தனி மார்க்கம் அமைத்த காவியும் வேறென்று அறியாமல், இன்று இந்துவாய் இணைவோம் என்று கூறியதும், குலத்தால் இணைவோம் என்று யாரும் கூறாததை கவனிக்காமல் பொறுமை காத்து இணைகிறோம் இன்றும் கோவில் விக்ரகத்தை தொட முடியாத பாமரனாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

You will never see birds whining together

Fusce eu nisi quis dolor ullamcorper pulvinar. Sed luctus odio ligula, eu ornare urna rutrum sit amet. Donec ipsum neque, volutpat eget elementum ac, ullamcorper quis orci

Subscribe US Now